Advertisement

எத்தனை மாற்றம் மங்கையரில்...!

நாற்பது வயதைக் கடக்கும் மத்திம வயதிற்குரிய பெண்களுக்கு ஏதோ ரொம்ப வயதாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டு, பலவித மனக்குழப்பங்களில் இருப்பார்கள். இதில் மனரீதியான பாதிப்பை அடைபவர்களும் ஏராளம். இந்த வயதுடைய பெண்கள் என்றுமே தனது உண்மையான வயதை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது.

குழந்தையாகும் மனம்:



என்னுடைய நண்பர்களுள் ஒருவர் 60 வயதுக்காரர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஜிம் செல்வார். முகநூலில் இருக்கிறார். கவிதைகள் எழுதி, அதை புத்தகமாக தொகுத்து இருக்கிறார். அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார். தனிமையை விரட்ட வேண்டும் என்பார்கள். அதனால் எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்க ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் 40 வயதை நெருங்கிய தோழிகள் இணைந்து ஒரு குழுவாக உள்ளோம். எங்கள் குழுவிற்கு 'வி ஆர் ஆல்வைஸ் சுவீட் 16' என்று பெயர் வைத்துள்ளோம். முதலில் டூவீலர், பின்பு கார் டிரைவிங் கற்றுக் கொண்டோம். நீச்சல் கற்பது நல்லது என கேள்விப்பட்டவுடன் குழுவாக சென்று கற்றுக் கொண்டோம். இன்று நன்றாக நீச்சல் அடிப்போம். இதே போல் பாட்டு, கீபோர்ட் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ளும் போது மனது குழந்தை போலாகி விடும். மனதை தனிமைப்படுத்தி மூளையை துருபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் சுவாமி கும்பிடும்போது மனதிற்காக ஒரு 5 நிமிடம் செலவழியுங்கள். கண்ணை மூடி மனதை அமைதிப்படுத்துங்கள். எண்ண ஓட்டங்களை 5 நிமிடம் நிதானப்படுத்துங்கள். சிறிது காலத்தில் எண்ண ஓட்டங்கள் நம் வசப்படும்.

உடல் ரீதியான மாற்றம்:



நோய் பற்றிய பயம் கொள்ளக்கூடாது. பல நோய்கள் வந்துவிடுமோ என்ற பயமே நோய்க்கு காரணமாகிவிடுகிறது. பிரச்னை, வலி லேசாக இருக்கும் போதே பிறகு பார்க்கலாம் என இருந்துவிடாமல் டாக்டரை அணுக வேண்டும். உணவிற்கு அடிமையாகவும் கூடாது, உணவை ஒதுக்கவும் கூடாது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவு செய்யுங்கள். காலையில் வாக்கிங் ஒரு மணி நேரம் போங்களேன் என்றால் நேரம் இல்லை என்கிறோம். ஜிம்முக்கு போய் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நேரமில்லை, சரி அரை மணி நேரம் யோகா செய்யுங்கள் என்றால் உடனே வீட்டு வேலை செய்யவே எங்களுக்கு நேரமில்லை என்கிறோம். வாழ்க்கையில் சாதிக்கும் பெண்களைப் பாருங்கள். அவர்கள் நேர மேலாண்மையில் எப்படி இயங்குகிறார்கள். ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்ய வேண்டும்என நேரத்தை வகைப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக நமக்காக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் ஒதுக்க முடியும். தனியாக செய்வதை விட்டு, விட்டு ஒரு இடத்திற்கு சென்று குழுவாக உடற்பயிற்சி செய்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். மனம் விட்டு பேசி வரலாம். நமக்கு ஏற்படும் சில சந்தேகங்களை நாலு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் என்ன செய்யலாம்:



40 வயது வரை வேலைக்கு செல்லாமல், தன்னுடைய ஆசைகளை அடக்கி குடும்பமே கோயிலாக நினைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். குழந்தைகள் படிப்பு, வேலை காரணமாக வீட்டைவிட்டு பிரிந்து செல்கின்றனர். குடும்பத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது. உடனே நமது சிந்தனை பழைய திறமைகளை, சாதனைகளை, தைரியங்களை ஏன் நம்முடைய பழைய அழகைப் பற்றிக்கூட சிந்திக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நாள் வீணாக்கிவிட்டோமோ என தோன்றுகிறது. வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் தொடங்கி நடத்தவோ ஆசை வருகிறது. இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கணவரின் துணையோடு தொழில் தொடங்குங்கள். அல்லது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லுங்கள். உடம்பையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். மத்திம வயது பெண்கள் தான் பல சாதனைகள் புரிந்துள்ளனர். நமக்கு பிடித்த பாடல்களை காலையிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் கேளுங்கள். 'இந்த உலகம் பிறந்தது நமக்காக... ஓடும் நதிகளும் நமக்காக...' அதனால் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக, அர்த்தமுள்ளதாக செலவு செய்யுங்கள். குடும்பத்திற்காக உழைக்கும் கணவர்களிடம் அன்பாக பேசவும், பொழுதுபோக்கவும் சிறிது நேரம் ஒதுக்கினால் இந்த வாழ்க்கையும் அர்த்தம் உள்ளதாக மாறும்.

- அமுதா நடராஜன், பெண்கள் நல ஆலோசகர், மதுரை. r_amudhayahoo.com

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement