Advertisement

மாணவனே நீ மகத்தானவன்..!- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

'இளைய தலைமுறையினர் மனங்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி' என்று சுவாமி ரங்கநாதானந்தர் கூறுவார். மனங்களை உருவாக்குவது என்பது ஆக்கப்பூர்வமான வழியாக அமைய வேண்டும். அறிவியல், மனிதநேயம், அடுத்தவருக்காக இரங்குதல், சுற்றுப்புற சுகாதாரம், சகிப்பு தன்மை ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்களோ அதை பொறுத்தே புதிய உலகம் உருவாகும். இன்றைய பள்ளிக் குழந்தைகள், வரும் ஆண்டுகளில் நாட்டின் முக்கிய பொறுப்பை தாங்கும் பணியை செய்து கொண்டிருப்பர். எனவே அவர்களிடம் தேசிய உணர்வையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். நம்மை நலிவுபடுத்தும் எதிர்மறைவான எண்ணங்களை மாணவர்கள் மனத்திலிருந்து அகற்ற வேண்டும். கஷ்டப்பட்டு படித்தால் தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும்! படிப்பதற்கு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை.

அச்சில் வார்க்க வேண்டும்:இதற்கான பதில் நம்முடைய ஆர்வமின்மை. மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க முடிகிறது. ஆனால் முப்பது நிமிடம் படித்தாலே அம்மா 'ஹாட் டிரிங்க்ஸ்' கலக்கி கொடுக்க வேண்டும். ஆர்வத்தோடு படிப்பது மட்டுமே வெற்றிக்கு வழி. ஒவ்வொரு மாணவனுக்கும் தான் வாழ்க்கையில் இப்படித்தான் ஆக வேண்டும் என்கிற எண்ணம் 14 வயதுக்குள் உருவாக வேண்டும். அந்த வயதில் தான் அவர்களின் மனம் உருகிய மெழுகுப்பதத்தில் இருக்கிறது. அவர்களை அழகான அச்சில் வார்க்க முடியும். இத்தகைய மாணவர்களுக்கு உயர் எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர் சமுதாயத்திற்கு இருக்கிறது. ஆனால் மாணவர்களுக்கு இன்றைய சூழல் சரியில்லை. அவர்களுடைய எண்ணங்களை சிதறடிக்க நிறைய காரணிகள் உள்ளன. சந்தையில் பெருகி கிடக்கும் பொழுதுபோக்கு சாதனங்கள், மொபைல் போன், சினிமாக்கள், பாடல்கள், 'டிவி' சேனல்கள் மாணவர்களின் சுயசிந்தனையை மழுங்கடிக்கின்றன. அவர்களின் நேரத்தை விழுங்கி பரவிப்படரும் விஷ செடியின் வேலையினை இந்த வியாபாரப் பொருட்கள் செய்து விடுகின்றன. கவனத்தை ஒருமுகப்படுத்தி லட்சிய விடியலை நோக்கி செல்வதுதான் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட ஒரே வழி. இதில் பெற்றோர்களின் பொறுப்பும் முக்கியம். மாணவர்களின் கனவுகளும், ஆசைகளும், பெரியவையாக இருக்க வேண்டும். லட்சியங்கள் உயர்வாக இருக்கும்போது அதனை அடைவதற்கான வழிமுறையும் உயர்ந்ததாகவே அமையும். இந்த லட்சிய கனவுகளில் ஒவ்வொரு மாணவனும் மூழ்கும்போது இயல்பாகவே பாடத்திட்டத்தின் கவனம் சென்று கல்வியில் வெற்றி சாத்தியமாகி விடுகிறது.

தேர்வு பயம்:மாணவர்கள் தேர்வு பயத்தால் பீதிக்குள்ளாகின்றனர். மன அழுத்தம் அதிகரிப்பதற்கு பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோரும் காரணம். உருட்டல் மிரட்டலுடன் குழந்தையை வளர்ப்பதால் பாடம் சார்ந்த நெருக்கடிகளை குழந்தைகளால் சமாளிக்க முடிவதில்லை. பெற்றோர் தங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்பதில்லை. பந்தயத்தில் ஓடத் தெரியாத குதிரையை அடித்தும் இழுத்தும் வந்து ரேஸ் மைதானத்தில் நிறுத்துவது போல் நடந்து கொள்கிறார்கள். இப்படி உந்தப்பட்டு 90 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைப்பதில்லை. ஏனெனில் வேலைக்கான தகுதியோடு மாணவர்கள் உருவாக்கப்படுவதில்லை.

அதிகரிக்கும் இடைவெளி:வேலைவாய்ப்புகள் இன்றைக்கு பெருகி விட்டன. பணிக்கேற்ற ஆட்கள் கிடைப்பதில்லை என்பதுதான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. படிப்பிற்கும் வேலைக்குமான இடைவெளி அதிகரித்துகொண்டே செல்கிறது. கடிவாளம் கட்டப்பட்ட குதிரை மாதிரி மாணவர்கள் ஒரே திசை, ஒரே இலக்கு நோக்கி பாய்பவர்களாகவே இருக்கின்றனர். இது என்னுடைய வாழ்க்கை; நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிள்ளைகள் நினைப்பதை நாம் தவறென்று கூற முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன் படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் பெற்றோர் சொல்தான் தேவவாக்கு. ஆனால் இன்றைய மாணவர்கள் மகத்தானவர்கள். தங்கள் சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அவர்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறது. நல்லதை தேர்வு செய்யும் நம்பிக்கை இருக்கிறது. அதனை பெற்றோர் புரிந்து கொண்டு வழிகாட்டினால் மாணவர்களின் வாழ்க்கை பாதை வளமாகும்.
- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்,
ஆசிரியர்,
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
மேலூர். 98654 02603.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement