Advertisement

தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல்: - டி.கண்ணன்

தொன்மையான நம் தமிழ்மொழியில் காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், திருமறை, சிற்றிலக்கியம் என பல்வேறு வகை இலக்கியங்கள் உள்ளன. இவை அறம், பொருள், இன்பம், வாழவேண்டிய முறை, கலை, பண்பாடு, நாகரிகம் என பல்வேறு பாங்கினை வெளிப்படுத்துகின்றன. கி.பி., ??ம் நூற்றாண்டிற்கு பிறகு இயற்றப்பட்ட சூழல் மண்டலம் பல்உயிரி, சுற்றுச்சூழல் கோட்பாடுகள் வருவதற்கு வெகு காலம் முன்னரே நம் பைந்தமிழ் இலக்கியங்களில் பலவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த எடுத்துக்காட்டுகள் 'தமிழில் இல்லாதது இல்லை' என்னும் சான்றோரின் வாக்கினை மெய்யாக்குகிறது. தமிழ் அமுதக் கடலின் சில துளிகளில் சுற்றுச்சூழல் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

உயிரற்றதும் உயிருள்ளதும்:சூழல் என்பது உயிரற்ற கல், மண், காற்று, மழைநீர், சூரியஒளியிலிருந்து உயிர்கள் உருவாகின்றன. தாவரங்கள் காற்று, தண்ணீர், சூரியஒளியைக் கொண்டு உணவைத் தயாரிக்கின்றன. உயிரற்ற, உயிருள்ள பொருட்களுக்கு இடையில் உள்ள தொடர்பே சுற்றுச்சூழல் எனப்படுகிறது. ????க்கு மேல் தான் சுற்றுச்சூழல் குறித்த சிந்தனையும், அதுசார்ந்த கல்வியும் கொண்டுவரப்பட்டது. உயிரற்ற பொருட்கள் இன்றி உயிரினங்கள் வாழமுடியாது. இந்த இரண்டு தொடர்பும் ஒன்றுக்கொன்று அறுபடாமல் இயங்க வேண்டும். உயிரினங்கள் இறந்தபின் மண்ணில் புதையுண்டு சிதைவடையும். அவை மீண்டும் சுற்றுச்சூழலோடு கலந்து விடும். அதிலிருந்து மீண்டும் உயிர்கள் புதிதாக உருவாகும். மாணிக்கவாசகர் எழுதிய 'வானாகி மண்ணாகி...' பாடல் ஒரு உதாரணம். இவ்வுலகம் தோன்றி அதன் உயிரற்ற பொருட்களில் படிமாற்றங்கள் ஏற்பட்டு அதிலிருந்து பிறந்த உயிர்களும் அவற்றிற்கு இடையேயான நுண்ணிய பிணைப்புகளையும் ஞானநிலைகளையும் அறியமுடிகிறது. சூழியல் மண்டல காரணிகளையும் அதன் செயல்பாடுகளையும் நவீன அறிவியல் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

திருக்குறளே முன்னோடி:'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின்' குறளில் கடல்நீரின் சிறப்பு, மழையால் எவ்வாறு மேன்மை அடைகிறது, கடல்நீரே மேகமாகி மழையை பொழிவிக்கிறது என்பதையும் விளக்குகிறது.
'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு'
'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து' - போன்ற குறள்களில் தாவரங்களின் வளரியல்பு, அவற்றின் செயல் மாற்றங்கள் விளக்கப்படுகின்றன.
'மருந்தாகித் தப்பா மரத்தாற்றல் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்' எனும் குறளில் பெருங்கொடைக்குணம் உடையவரின் செல்வத்தை, பிணிக்கு மருந்தெனப் பயன்படும் மரத்தின் அனைத்து பயனுள்ள பாகங்களோடு ஒப்பிட்டு கூறப்படுகிறது. சூழல் மண்டலத்தின் தொண்டு எனும் கோட்பாடுகளுக்கு திருக்குறள் முன்னோடியாக இருக்கிறது என தெரியவருகிறது.

உயிர்மண்டலத் தொகுப்பு:ராமாயணக் காவியத்தில் கம்பர் ராம, லக்குவர், சுக்ரீவனுடன் கானகத்துள் செல்லும் வழியின் இயல்பினை பாடலில் விளக்கியுள்ளார். 'நீடு நாகமூடு மேகம் ஓடநீரும் ஓடநேர்... ஓடவே' இப்பாடலின் பொருளான மேகத்தை முட்டும் கானகத்தில் சுரபுன்னை மரங்கள், படமெடுத்து ஆடும் பாம்புகள், யானை, சிங்கங்கள், ஓடையில் வாளை மீன்கள், நீர்ப்பாம்புகள், வேங்கை, கருங்குரங்குகள் என வனஉயிரி மண்டலத் தொகுப்பு அறியப்படுகிறது. வனத்தில் பலவகை உண்டு. வளமான வனம் என்பதால் மேகத்தை முட்டும் வனம் என்று கூறப்படுகிறது. எந்த காட்டில் எந்த உயிரினம், தாவரஇனம் உள்ளதென ராமாயணத்தில் துல்லியமாக கூறப்பட்டுள்ளது.

ஐந்திணை ஐம்பது:மாறன் பொறையனாரால் இயற்றப்பட்ட அகப்பொருள் நூல்களில் ஒன்றாக ஐந்திணை ஐம்பது, அளப்பறிய சூழல் அறிவியல் களஞ்சியம். மக்கள் வாழும் பரப்பிற்கேற்ப மன நிலையும் வேறுமாதிரி இருக்கும். இதையே ஐவகை நிலங்களாக பிரித்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று கூறுகின்றனர். மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தில் மழைநெல், தினை விளையும். குறிஞ்சி, காந்தள் பூக்கள் பூக்கும். அகில், வேங்கை மரங்கள், புலி, கரடி, சிங்கம் இருக்கும். இப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற விலங்கினம், தாவர இனம், மக்கள், பூக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிலப்பரப்பின் இயல்புகளான பெரும்பொழுது, சிறுபொழுது, தாவர விலங்கினங்களின் தொகுப்பு, மனித ஆற்றல் வளம், அவர்களது நுண்ணறிவு போன்ற அகப்பொருள் உண்மைகள் கண்டுபிடிப்பு ஒரு தெளிவான ஆராய்ச்சி அக்காலத்திலேயே செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

சோலைவனக் குறிப்புகள்:சிற்றிலக்கியங்களில் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, திரிகூட ராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டது. அந்நூலில் குற்றாலத் திரிகூட மலைவளம், சோலைவன வளம், தாவர விலங்கின வகைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு, மலைவாழ் மக்களின் உணவு சேகரிப்பு முறை, இமயமலை, கைலாயமலை, கனக மாமலை, கொல்லிமலை மகத்துவமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'அம்புலியைக் கவளமென்று தும்பி வழிமறிக்கும்' எனும் வரியில் தும்பியின் இரவுநேர செயல்பாடு கூட நுணுக்கமாக பாடலாசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
'வரப்புயர நீர் உயரும்
நீர்உயர நெல் உயரும்
நெல்உயரக் குடிஉயரும்
குடிஉயரக் கோன் உயரும்
கோன்உயர (செங்) கோல் உயரும்'
எனும் அவ்வை பிராட்டியின் மூதுரை வரிகளில் விவசாயத்தின் சிறப்பு வலியுறுத்தப்படுகிறது. இப்படி சுற்றுச்சூழலை விளக்க தமிழ் இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கும் சான்றுகள் பல.
- டி.கண்ணன்,
உதவி பேராசிரியர்,
தாவரவியல் துறை,
தியாகராஜர் கல்லூரி,
மதுரை.
dekan_crediffmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement