Advertisement

நல்லது நடு வழி; பொல்லாதது போகிற வழி - முனைவர் சு.லெட்சுமி

"நல்லதை செய்து நடுவழியே போனால் பொல்லாதது, போகிற வழியில் போகும்” என்பார்கள்.
இந்த கால கட்டத்தில் நல்லது செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயங்கள் வரை யாருக்கும் பொறுமை என்பதே இல்லை. எல்லாமே அவசரம். அவசரத்தில் எதையாவது செய்து விட்டு சாவகாசமாக சங்கடப்படுபவர்கள் நிறைய. மண வாழ்க்கையில் கூட வெவ்வேறு சூழ்நிலையில் இருந்த இரு உள்ளங்களை நாம் இணைத்து வைக்கின்றோம். நான்கு சுவர்களுக்குள் என்ன நடந்தது என்று அவர்களே சொன்னால் அன்றி நமக்கு தெரியாது. ஆனால், ஏதோ ஒரு சிறு விஷயத்தில் கூட பிணக்கு வந்து, இன்று மன முறிவு மிக அதிகமாகி விலைவாசி உயர்வைபோல் விண்ணை தொட்டுள்ளது.

ஆண்டவனுக்கு குறுக்கு வழி:வாகனத்தில் செல்லும்போது அதை நிறுத்தி மொபைல் போனில் பேசாமல், ஓட்டிக் கொண்டே பேசி, பின்னர் பேசவே முடியாமல் போனவர்கள் எத்தனையோ பேர். கோயிலில் கூட கூட்டமாக இருந்தால், சற்று பொறுமையாக இருந்து ஆண்டவனை தரிசித்து நம் தாக்கல்களை சொல்லி நிம்மதி பெருமூச்சு விடுபவர்களே இல்லை. அங்கும் ஏதாவது குறுக்கு வழியில் ஆண்டவனை தரிசித்து அவசரத்தில் வந்து விடுகின்றனர். நல்லது செய்வது, பொறுமையாக இருப்பது, அடுத்தவரை கெடுக்காமல் இருப்பது போன்ற நல்ல செயல்களை செய்பவர்கள் ஒரு சிலரே. அலுவலகங்களில் கூட ஒருவரை ஒருவர் புறம் சொல்வது, "அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும்” என்பது போல், உடன் பணிபுரிபவர்களுக்கு வேண்டுமென்றே உபத்திரவம் கொடுக்கும் நல்லவர்கள் உள்ள இடமாகி விட்டது. நிறுவனத்தின் கணக்கு எழுதும் போது, கணக்கை கணக்காக எழுதாமல், தனக்காக எழுதி இயன்றவரை பற்றி கொள்வதை நாம் பார்க்கிறோம். பொறுப்பிலே இருப்பவர்கள் அன்புடனும், அரவணைப்புடனும், பண்புடனும், அனுசரிப்புடனும், பொறுப்பை பார்க்க வேண்டும். இல்லை என்றால் பொறுப்பை பார்ப்பவர்கள் பொலிவிழந்து போய் விடுவார்கள்.

பொறாமை கூடாது:தொழில் செய்பவர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் நல்ல வழிகளில் செய்வது இல்லை. தொழிலில் போட்டி அவசியம். ஆனால் பொறாமை இருக்க கூடாது. தொழில் தர்மத்தை கடைபிடிப்பது ஒரு சிலரே. ஆனால், இன்றோ பாலில் கூட கலப்படம் என்ற செய்தியை காண்கின்றோம். கலங்கியது பால் மட்டுமா! மனிதர்களின் மனங்களும் தான். நாம் செய்கின்ற செய்கைகளை பொறுத்தே நல்லதும், அல்லாததும் நடக்கின்றது. பொதுவாக அறிவுரைகளை யாரும் விரும்புவது இல்லை. சில சமயங்களில் இதுவே எதிர்மறையாக வந்து விடுகின்றது. ஒரு வீட்டில் அப்பா தன் பையனுக்கு அப்போதைக்கப்போது, நல்ல அறிவுரைகளையே சொல்லி வந்தார். ஒரு நாள் பையன் தன் தந்தையிடம் வந்து"அப்பா எனக்கு ஒரு சந்தேகம்” என்றான். "என்ன” என்று தந்தை கேட்டார். "அப்பா, உங்கள் காதுக்கு பக்கத்தில் முடி வெள்ளையாக இருக்கின்றதே ஏன்?” என்றார். இது தான் சமயம் என்று எண்ணிய தந்தை மகனிடம், "பிள்ளை பொய் சொன்னால் தந்தைக்கு இப்படி வெள்ளை முடி வளரும். நீ கொஞ்சமாக பொய் சொல்லியிருப்பதால் எனக்கு கொஞ்சமாக வந்து இருக்கின்றது. இனிமேல் வெள்ளை முடி வளராமல் இருக்க நீ பொய் சொல்வதை விட்டு விடு” என்றார். உடனே பையன் சொன்னான் "அப்பா, இப்ப தான் எனக்கு தெரியுது. தாத்தாவுக்கு ஏன் தலை முழுக்க வெள்ளையாக இருந்தது,” என்றான். இப்படி சில அறிவுரைகள் நம் பக்கமே திரும்பும் வாய்ப்பு உண்டு. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.' அலுவலகத்தில் மேலாளரின் கீழ் மூவர் பணி செய்து வந்தனர். இதில் ஒருவர் எப்போதும் மற்ற இருவரை பற்றி ஏதாவது, மேல் அதிகாரியிடம் குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் மற்ற இருவருக்கும் மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்காததோடு, அவர்களை மிகவும் கடிந்து கொண்டு எரிந்து விழுவார். சில சமயங்களில் வேண்டாத வேலையை வேண்டுமென்றே செய்ய வைப்பார். இதனால், மற்ற இருவரும் ஏதும் செய்ய இயலாமல் அலுவலகம் முடிந்ததும் நேரே அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அங்கு, "அவருக்கு நல்ல புத்தியை கொடு” என்று சொல்லி விட்டு நிம்மதியாக சென்று விடுவார்கள். சில நாட்கள் இப்படியே நகர்ந்தது. ஒரு நாள் அலுவலகத்தில் செய்தி ஒன்று காத்திருந்தது. எப்பவும் கெடுதல் செய்து கொண்டிருப்பவருக்கு, பக்கவாதம் வந்து சரியாக பேச இயலாமல் இருப்பதாக சொன்னார்கள். நல்லவர்கள் இருவரும் மிகவும் மனம் வருந்தி, மீண்டும் ஆலயத்திற்கு சென்றனர். "ஆண்டவனே அவருக்கு நல்ல புத்தியை கொடு” என்று தான் வேண்டினோம், "இப்படி தண்டித்து விட்டாயே, சீக்கிரம் அவர் குணம் பெற அருள் வேண்டும்,” என்று வேண்டி சென்றனர்.

தண்டனை உண்டு:ஆலயத்திற்கு குற்றம் செய்பவர்களும், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்களும், கேடு,கெடுதல் செய்பவர்களும், நிறைய பாவத்தை செய்பவர்களும் வந்து வேண்டுகின்றனர். அவர்களுக்கு ஒரு உண்மை தெரிவதில்லை. குற்றம் செய்து விட்டு கோயிலுக்கு வந்து வேண்டும் போது, ஆண்டவன் கண்ணையும், காதையும் மூடி கொண்டு விடுகிறார். அவர்களுக்குரிய தண்டனை வெளியே காத்திருக்கிறது.


"பஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா!


பாவந் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா!


நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா ! நல்ல


நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா!''

நீங்கள் தெய்வமாக வேண்டாம். மனித நேயம் மறைந்து வரும், இந்நாளில் மனித நேயம் உள்ள மனிதர்களாவது ஆகலாமே. அடித்த பந்து திரும்ப வரும்; எறிந்த கல் திரும்ப விழும் முன்னோடும் வாய்க்கால், பின் ஓடும் எதற்கும் அவசரம் வேண்டாம், பொறுமையாக இருங்கள், தன்னம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். இயன்றவரை நல்லதையே செய்யுங்கள். இல்லை என்றால் நீங்கள் எதை செய்தீர்களோ, அதுவே என்றாவது ஒருநாள் வட்டியும், முதலுமாக திரும்ப உங்களுக்கே வரும். நல்லதை செய்து நல் வழியே போவோமே.

- முனைவர் சு.லெட்சுமி, துணை முதல்வர், உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரி, காரைக்குடி. email: lakshmiurcwgmail.com

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement