Advertisement

உருவாகுமா புதிய விவசாய புரட்சி!- முருகானந்தன்

இனி எல்லாமே இந்திய தயாரிப்பு. இந்தியப் பிரதமரின் இந்த கனவு, உன்னதமானது. அதற்கேற்றாற் போல, அரிசி முதல் அணுசக்தி வரை எல்லா துறைகளிலும் சுதேசி ஆராய்ச்சிகளும், உற்பத்தியும் சற்றே வேகமெடுத்திருப்பதாகவே படுகிறது.

தொடர்ந்த கவனிப்பும், அனுசரணையான அணுகுமுறையும் இருக்கும் பட்சத்தில், இது சாதிக்கக் கூடியதானது தான். என்றாலும், எல்லாவற்றிற்கும் ஆணி வேரான விவசாயத் துறையில் சுதேசியத்தை வளர்க்காத வரை, உரங்கள், விதைகள் என்று வெளிநாட்டு கம்பெனிகளிடத்தே கையேந்தும் வரை, எல்லாமே கானல் நீராக போய்விடுகிற அபாயமும் இருக்கவே செய்கிறது.உழவர் பின்னது தான் உலகம். இன்னும் எத்தனை நுாற்றாண்டுகள் ஆனாலும், அண்ட சராசரத்தையே நாம் அடக்கி ஆண்டாலும் இது மட்டும் மாறாத, மாற்றவே முடியாத உண்மை.விவசாயத்தை, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியே ஆக வேண்டும், என்று அரசு முடிவு செய்து களத்தில் இறங்கினால் மட்டுமே, உண்மையான சுதேசியத்தை, காந்தியின் கனவான, தற்சார்ப்பு கிராமப் பொருளாதாரத்தை அடைவது என்பதை விட, குறைந்தபட்சம் அதுபற்றி யோசிக்கவாவது முடியும்.வேளாண் துறை இன்று சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணங்களை, விவசாயிகள் படும் சிரமங்களை, அரசு விவசாய கொள்கைகளில் உள்ள ஓட்டைகளை நுணுகி ஆராய்வது அவசியம்.

கடந்த கால அரசுகள் இந்த விஷயத்தில் அசட்டையாக, முட்டாள்தனமாக நடந்ததன் காரணமாகவே, விவசாயமே பாவப்பட்ட துறையாகவும், விவசாயிகள் எல்லாருமே பாவிகளாகவும் ஆயினர். அதில் ஒன்று, கடந்த, 1960களில் மகசூலுக்காய் நுழைக்கப்பட்ட பசுமைப் புரட்சி. அது செய்த பெரிய புரட்சி, லட்சக்கணக்கான விவசாயிகளை கொன்று தீர்த்தது மட்டுமல்லாமல், தாய் பூமியின் கர்ப்பத்தில் ரசாயன நச்சுகளை கொட்டி புதைத்து வைத்தது.பசுமைப் புரட்சி என்ற மாரீச மான், ரசாயன உர, மலட்டு விதை ராவணனுக்காக, மரபு சார்ந்த வேளாண்மை ராமனையே வஞ்சகமாய் வீழ்த்தி விட்ட கொடுமைக்கு, மவுன சாட்சிகள். ஆட்டிசம், மூளை வளர்ச்சிக் குறைவு, பொசுக்கென வரும் கேன்சர், விந்தணு குறைவு, இன்னும் இன்னும் எத்தனையோ நோய்களும் பரவி விட்டன.பசுமைப் புரட்சியின் மூலமாக, உலகப் போரின் மீந்து போன கழிவுகள், ரசாயன உரங்களாக உருமாறி வந்தது ஒரு பக்கம். அதன் இன்னொரு பக்கம், விதைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு பல்லிளித்து வரவேற்றது. இனப் பெருக்க சக்தியுள்ள நாட்டு விதைகளை மறுத்துவிட்டு, மரபணு மாற்றப்பட்ட வீரிய விதைகளை இறக்குமதி செய்தது.இன்றைக்கு பருத்தியாகட்டும், பப்பாளியாகட்டும், பழங்களாகட்டும் இவைகளை விளைவிக்கக்கூடிய பாரம்பரிய நாட்டு விதைகள் என்பது, கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன.

அப்படி ஒன்றிரண்டு நாட்டு ரக செடிகள் தப்பிப் பிழைத்து எங்கேனும் வளர்ந்திருந்தாலும், அவற்றின் மூலம் இழந்த இந்த தேசத்தின் பாரம்பரிய விதைகளை மீண்டும் விளைவிக்கவே முடியாது. காரணம், முன்னரே மலட்டு விதைகளை இறக்குமதி செய்து, நாடு முழுவதும் பயிரிடப்பட்டு வளரும் தாவரங்களில் பூக்கும் மலட்டுப் பூக்கள்.'மகரந்தச் சேர்க்கை' என்பது இயற்கையின் பேரதிசயம். அதை நிகழ்த்துபவை தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும்.ஆனால், இந்த வெளிநாட்டு கம்பெனிகள் செய்த நரித்தனம், நம் ஏழை விவசாயிகள் என்றென்றைக்கும் தங்களது பூட்ஸ் காலணிகளை கண்ணீரால் துடைத்து சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே. அதற்காக அவர்கள் செய்த காரியம் தான், மலட்டுத் தன்மையுள்ள விதைகள். இந்த விதைகளிலிருந்து வளர்கிற எந்த பயிர்களுக்கும் திரும்பவும் உற்பத்தி செய்யும் திறனிருக்காது. பூக்கிற பூக்கள் எல்லாம் மலடு! தேனீக்கள் எங்கு போய் சேர்க்கை செய்ய?பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்ய எல்லாவித காய்கறிகள், பழங்களின் நாட்டு விதைகள் அதிகளவில் தேவை. அதற்காக அரசு அமைப்புகளை அணுகினால் பெரும்பாலும், 'இல்லை' என்றே பதில் வரும். அப்படியே கிடைத்தாலும், அதிகபட்சம் அவை, 10 அல்லது 20 விதைகள் தான்; இந்த விதைகளை வைத்து, 20 சென்ட் கூட நட இயலாது. அப்படி இருக்க, ஏக்கர் கணக்கில் நடுவதற்கு எங்கே போவது?இப்போது நமக்கு இனப் பெருக்க சக்தியுள்ள விதைகள் தேவை. அதற்கு, பூக்களுக்குள்ளே அயல் மகரந்தச் சேவை நடைபெற வேண்டும். இருப்பதோ, அதிகபட்ச மலட்டுத் தன்மையுள்ள பன்னாட்டு விதைகளால் விளைந்த பயிர்களின் பூக்கள்; தேனீக்கள் எங்கே போய் சேர்க்கையை நிகழ்த்தும்? குறைவான எண்ணிக்கையில் உள்ள நாட்டுரக பூக்களோடு மகரந்தச் சேர்க்கை நடந்தாலும், கிடைப்பது தாயை விட வீரியமற்ற விதைகளே.

இந்திய பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க அவசர, அவசிய தேவை தரமான இனப் பெருக்க சக்தியுள்ள நாட்டு ரக விதைகள். அதை எவ்வகையிலேனும் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமும், கடமையும் அரசுக்குத் தான் உண்டு.வேளாண் துணை கல்வி அமைப்பு ஒன்றில் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட இயற்கை வேளாண் பிரிவானது, துவக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையிலுமே ஒரு இயற்கை விவசாய ஆராய்ச்சியையும் செய்ததில்லை; ஆராய்ச்சி தொடர்பான கூட்டங்களை நடத்தியதில்லை. இயற்கை விவசாயிகளின் பண்ணைக்கு களப்பணி குறித்து விசாரிக்கக்கூட ஒருமுறையேனும் வந்ததில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இயற்கை விவசாயிகளால் முன்வைக்கப்படுகின்றன.இத்தனை நாள் நடந்ததல்ல பசுமைப் புரட்சி! விவரமறியாத விவசாயிகளின் கையைப் பிடித்து இழுத்துப் போய், கழுத்தை நெரிக்கிற கடனாளியாக்கிய மலட்டுப் புரட்சி அது; இந்தியனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய வறட்டுப் புரட்சி.இனி, நிகழ இருக்கிற வேளாண் புரட்சியே, தேசத்தை மேம்படுத்தும் மேலான புரட்சி. நேரான பாதையில், சீரான வேகத்தில் இது பயணிக்கும்போது, தேசமே விவசாயிகளை கொண்டாடும்.
ebfashion6gmail.com
- முருகானந்தன் --
சமூக ஆர்வலர்
Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement