Advertisement

கோயில்களும் மக்கள் வாழ்வும்!

கோயில்கள் இன்று பெரும்பாலும் சமய வழிபாட்டின் சின்னங்களாகவே அறியப்படுகின்றன. கடவுளை வழிபடுவதற்கு கோயில்களில் வானுயர்ந்த கோபுரங்களும் அரண் போன்ற பாதுகாப்பு கோட்டை சுவர்களும் விசாலமான மண்டபங்களும் தேவையில்லை, என்பதை நமது முன்னோர் உணராமல் இல்லை. முற்காலத்தில் மரத்தினாலும், களிமண் மற்றும் சுடு மண் கலவையாலும் கோயில்கள் கட்டப்பட்டன. பிற்காலத்தில் கோயில் கட்டும் கலை வளர்ச்சியுற்று கருங்கல்லால் திருப்பணி செய்யப்பட்டு பழமை மறைக்கப்பட்டு புதுமையாக மாற்றி அமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைத்தபோது கோயில்களை வழிபாட்டு மையமாக மட்டுமின்றி சமுதாய தேவைகளுக்கான சமூக நல மன்றங்களாகவே மன்னர்கள் வடிவமைத்தனர். 'நமது கலாசாரமே கோயில் அடிப்படையிலான கலாசாரம்' என்ற கூற்று கோயிலுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த சமூகத் தொடர்பை விளக்குகிறது.

கோயில்களின் தோற்றம்:கோயில்கள் முதலில் புராண, இதிகாசங்களின் அடிப்படையிலேயே தோன்றின. மன்னர்கள் பக்திப் பெருக்கால் கடவுள்களுக்கு கோயில்கள் கட்டினர். அதே வேளையில் குடிமக்களுக்காகவும், அரசனின் புகழுக்கும், அதிகார வல்லமைக்கும் ஏற்ப கோயில்கள் பல இடங்களில் கட்டப்பட்டன. ராஜராஜசோழனின் தஞ்சை பெரிய கோயிலும், ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் இந்த வகையே. இவை தவிர்த்து போர்களில் அடைந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக மன்னர்கள் பல கோயில்களை கட்டியுள்ளனர். இரண்டாம் விஜயாதித்யன் என்ற சாளுக்கிய மன்னன் 12 ஆண்டுகளில் 108 போர்களில் பங்கேற்று வெற்றி பெற்று தான் போரிட்ட 108 இடங்களிலும் கோயில்களை எழுப்பினான் என்கிறது வரலாறு. இவ்வாறு பல காரணங்களுடன் கட்டப்பட்ட கோயில்களில் சமயப் பணிகள் தவிர்த்து பல சமூக நற்பணிகள் நடைபெற்றுள்ளதை வரலாற்று பதிவுகள் உணர்த்துகின்றன.

அரசு அலுவலகம்:கோட்டை சுவர் போல் சுற்றிலும் பிரம்மாண்ட மதிற்சுவர், அந்நியர்கள் எளிதில் நுழையாதபடி அமைக்கப்பட்ட உயர்ந்த வாயிற் கதவுகள் கோயிலுக்கு பாதுகாப்பாக இருந்ததால், அரசு நிர்வாகம் கோயில்களில் இருந்தே நடைபெற்றது. அரசரின் ஆணைகள் கோயிலில் வைத்தே எழுதப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர் கோயில்களிலேயே பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் காலத்தில் அரசரின் ஆணைகளை எழுதவும், அரசு ஆவணங்களை பாதுகாக்கவும் கோயில்களில் 'ஓலை நாயகம்' என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அரசர் வழங்கிய நன்கொடைகள், அற மற்றும் இறைப்பணிகள், போர் வெற்றிகள் பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களாகவும், செப்புப் பட்டயங்களாகவும் ஓலைச்சுவடிகளாகவும், கோயில்களில் பாதுகாக்கப்பட்டன. சான்றோர்களின் இலக்கியப் படைப்புகளும்,கோயில்களிலேயே பாதுகாக்கப்பட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் சிதம்பர ரகசியமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாதுகாத்து வைக்கப்படவில்லையெனில் தேவாரம் இயற்றியோர் இன்று வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பது என்பது கடினமே. ஆகவே ஒரு நாட்டின் நிலம், பொன், பொருள், மக்கள், வாணிபம், நிர்வாகம், இலக்கியம் என அனைத்து வகை ஆவணங்களையும் பாதுகாத்த இடமாக கோயில்கள் இருந்ததால் அதனை 'அரசு அலுவலகம்' அல்லது 'வரலாற்றின் முதல் ஆவண காப்பகம்' எனலாம்.

கோயில்களே கருவூலம்:மன்னர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களையும், போரின் மூலம் கொண்டு வரப்பட்ட விலை மதிப்புமிக்க பொருட்களையும் கோயில்களிலேயே பாதுகாப்பாக வைத்தனர். இவற்றை பாதுகாக்க தனி அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டிருந்தார். நாணயங்கள் செய்யும் இடமாக கோயில்கள் இருந்ததாக கல்வெட்டுகள் உறுதி செய்கிறது. இறை பக்தி காரணமாக மன்னர்களும் அவர் தம் வாரிசுகளும் விலையுயர்ந்த பொருட்களை கோயில்களுக்கு வழங்கியதாலும், நாட்டு மக்கள் வரியாக செலுத்திய பணம் மற்றும் தானியங்கள் கோயில் கருவூலங்களில் சேமித்து வைக்கப்பட்டதாலும் கோயில் கருவூலங்கள் பொன், பொருளால் நிரம்பி வழிந்தன.

பள்ளிகள், கல்லூரிகள்:இறையருள் வேண்டி கோயிலில் அன்றாடம் கடவுளுக்கு பூஜை செய்தவர்கள் அர்ச்சகர்கள் வேத, புராண, இதிகாசங்களில் நன்று தேர்ச்சி பெற்றிருந்ததால் 'குரு' (ஆசிரியர்) நிலைக்கு உயர்ந்தனர். இவர்களிடம் பாடங்களை கற்க விரும்பிய மாணவர்கள் குருக்கள் இருக்கும் இடங்களுக்கே (கோயில்) சென்றனர். நாளடைவில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கோயில்கள் 'பள்ளி' என்ற பாடசாலைகளாயின. கோயிலின் சுற்றுத் தாழ்வாரமே 'கல்லூரி' என கல்வெட்டுக்களால் குறிப்பிடப்படுவதிலிருந்து கோயில்கள் கல்விக் கூடங்களாக சிறப்புற்று விளங்கியது தெளிவாகிறது. சமணர், பவுத்தர் கோயில்கள் ஞானத்தை போதிக்கும் 'பள்ளி' என்றே அழைக்கப்படுகிறது. ஒரு மாணவன் தன் படிப்பை தொடங்குவது முதல் பண்டிதனாகி அவனின் நூல் படைப்புகள் அரங்கேற்றம் வரை அனைத்துமே கோயில்களில் நடந்திருக்கின்றன.

மருத்துவமனை:கோயில்களில் மண்டபங்கள், மடப்பள்ளி, பாடசாலை போல 'ஆதுலர்சாலை' என அழைக்கப்பட்ட வைத்தியசாலைகள் செயல்பட்டு வந்துள்ளன. கோயில்கள் கலாசாரத்தின் அடையாளங்களாகத் திகழும் கலைகள் வளர்த்த இடமும் ஆகும். வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மகாமண்டபங்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ள நடன, ஓவிய, சிற்ப படைப்புகள் நமது முன்னோர்களின் கலாச்சாரத்தை காட்டும் கண்ணாடி. திருவிழாக் காலங்களில் கோயிலில் நடன, நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலைகள் வளர்க்கப்பட்டன.

கலைக்கூடங்கள்:கோயில்களில் நடன கலைக்கு முக்கியத்துவம் வழங்கிய ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலில் நடனமாட 'தளிச்சேரி பெண்டிர்' என்ற சிறந்த நாட்டிய மகளிர்களை தேர்வு செய்ய ஆயிரம் பேர் பங்கேற்ற ஒரு நாட்டிய போட்டித் தேர்வை நடத்தினார். மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் பதிவு செய்ய விரும்பிய நமது முன்னோர்கள் தங்களின் தொழில், உணவு, சமய நம்பிக்கை, காதல், வீரம், போர், கருவிகள், பொழுதுபோக்கு என அனைத்தையும் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் கோயிலில் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் படைத்தனர். இதனாலேயே கோயில்கள் சமூகத்தில் அரிய கலைக்கூடமாக திகழ்கிறது.

சமுதாயக்கூடம்:புயல் மற்றும் மழைக்காலங்களில் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் போது கோயில்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். கோயில் வளாகத்தில் இருந்த மடப்பள்ளியில் (கோயில் சமயலறை) இருந்து உணவு சமைத்து வழங்கப்பட்டது. துயர காலங்களில் அடைக்கலம் தரும் இடமாக கோயில்கள் இருந்ததால் தான் 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்,' என்ற பழமொழி உருவானது. கோபுரமும், அதன் உச்சியில் உள்ள கலசமும் இடியை தாங்கவல்ல சக்தியாக இருந்து மக்களை காத்ததினால் கோபுரங்களை மக்கள் கடவுளாகவே வணங்கி வந்துள்ளனர். 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்ற பழமொழி இதனையே உணர்த்துவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். மழைக்காலம் முடிந்தவுடன் விவசாயப் பணிகளை தொடங்க கோயில்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட விதைகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் விவசாய பணிகள் தடையின்றி நடந்தது. இவை தவிர்த்து திருமண நிகழ்வுகள், விருந்து நிகழ்வுகள், என பெரும்பாலான சமூக நிகழ்வுகள் கோயிலை மையமாக வைத்தே நடைபெற்று வந்துள்ளது. இவ்வாறு நமது முன்னோர்களின் வாழ்வில் மட்டுமல்ல, கலாசார பண்பாட்டு அமைப்பில் இரண்டற கலந்து இன்றைய பெருமையாக நிமிர்ந்து நிற்கின்றன கோயில்கள். அவற்றை பாதுகாப்போம், அதன் பழம் பெருமையை சிதைக்காமல்...!

- முனைவர் சி. செல்லப்பாண்டியன், உதவிப் பேராசிரியர் (வரலாற்றுத்துறை) தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை.78108 41550

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement