Advertisement

தேசத்தின் சமையற்கட்டில் விஷம்...!

“திராட்சைக் கொடியில் பூ பிடிக்கும்போது விலை உயர்ந்த ஒரு பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிப்போம். அம்மருந்தில் ஒரு துளி கொடியின் ஓரிடத்தில் பட்டால் போதும், அம்மருந்தின் வீரியம் அக்கொடி முழுக்கப் பரவி விடும். அதன் பின்னர் பிஞ்சு பிடித்ததும், திராட்சைக் குலைகளை ஒருவகை பூச்சிக்கொல்லி மருந்தில் முக்கி நனைத்து விடுவோம்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை என 14 வாரங்கள் செய்வதுண்டு. அப்போதுதான் எவ்விதப் பூச்சிகளும் தாக்காமல் நமக்கு அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் அதிகமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் திராட்சைப் பழங்களில் இல்லாமலா போகும்?
நிச்சயம் இருக்கும். கொஞ்சம் யோசித்தேன்.. இப்படி மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் ஒரு விவசாயம் செய்து நாம் சம்பாதிக்க வேண்டுமா? என் மனசாட்சி உறுத்தியது, திராட்சைப் பயிரிடுவதையே நிறுத்தி விட்டேன்” என்றார்.
சமையலறையில் விஷம்
திராட்சை மட்டுமல்ல நாம் உண்ணும் காய்கறிகள், பழவகைகள், உணவு தானியங்கள் அனைத்தும் ரசாயன உரங்களிலும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதுகாப்பிலும் தானே விளைகின்றன. உண்ணும் நமக்கு நிச்சயம் பாதிப்புண்டு. ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தொடர்ந்து பயன்படுத்தியதால் விளைநிலங்களே இன்று விஷத்தன்மை பெற்றுவிட்டன.

நான் எனது நண்பர் கட்டியுள்ள புதுவீட்டிற்கு செல்கிறேன். வீட்டை அவர் எனக்கு சுற்றிக் காட்டுகிறார். நவீனமாக அமைக்கப்பட்டுள்ள சமையல் அறையையும் காட்டுகிறார். சமையல் அறையைப் பார்வையிட்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! சமையல் அறையில் 'POISON' என்று எழுதப்பட்டு ஒரு பெரிய பாட்டில் நிறைய விஷம் இருக்கிறது. அப்போது என் நண்பர், “கண்டிப்பாக எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்” என்று வற்புறுத்தினால், நான் சாப்பிடுவேனா?
சமையல் அறையில் விஷம் இருந்தால் எப்படி அந்த வீட்டில் நம்பி சாப்பிட முடியாதோ, அது போலத்தான் விளைநிலம் என்பது நம் தேசத்தின் சமையல் கட்டு, அந்த விளைநிலங்களே விஷமானால், ஆரோக்கியமான வாழ்வை நாம் எப்படி பெறுவது?பளபள காய் கனிகள்
வாடிய காய்கனிகளையும், சொத்தைக் காய்கனிகளையும் விற்பதே பாவம் என்றும், அவற்றை வாங்குவது முட்டாள் தனம் என்றும், ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இன்றோ, பளபளப்பான காய்கனிகளை வாங்குவதுதான் முட்டாள்தனம் என்கின்றனர் உடல்நல ஆலோசகர்கள்.
காய் கனிகள் பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்கைக் காய்கறிகளிலும், கீரைகளிலும் பூச்சிக் கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப்பயன்படுத்தினால் எந்தப் பிரச்சனையும் இல்லை
என்கின்றனர். 'சொத்தையே சுகம்'
என்பதே இன்றைய வேளாண்மை நமக்குத் தரும் உறுதி.
புத்தர் தனது சீடர் ஒருவரது குடிலுக்குச் சென்றார். சீடரின் போர்வையில் கிழிசல் தென்பட்டது. நல்ல போர்வை ஒன்றைத் தருவதாகச் சொன்ன புத்தர், ஒரு
போர்வையைக் கொடுத்தனுப்பினார். சில நாட்களுக்குப்பின்னர் புத்தர் மீண்டும் சீடரின் குடிலுக்குச் சென்றார்.
“போர்வை பயனுள்ளதாக இருக்கிறதா?” என்று கேட்டார்.
“ஆமாம் குருவே!”
“பழைய போர்வையை என்ன செய்தாய்?”
“கிழிசலை வெட்டித் தைத்து படுக்கை விரிப்பாக்கிக் கொண்டேன் குருவே!”
“முன்பு படுக்கை விரிப்பாக இருந்தது?”
“இப்போது தலையணை உறையாக
உள்ளது குருவே!”
“முன்பு தலையணை உறையாக
இருந்தது?”
“வாயில்படி அருகில் கால்மிதியாக உள்ளது குருவே!”
“முன்பு கால்மிதியாக இருந்தது?”
“விளக்குத் திரியாக நம்முன் உள்ள தீபத்தில் எரிந்து கொண்டிருக்கிறது குருவே!”
இப்படி வீண் என்று எதையும்
பார்க்காத பயன்பாடுதான் நமது வேளாண்மைக் கலாசாரமாக இருந்தது.
பயன்பாட்டு சுழற்சி
ஏரில் பூட்டிய மாடுகளோடு மனிதனும் சேற்றில் நடந்தான். மாட்டுச் சாணமும் இலைதழைகளும் வயல்வெளிகளில் அடிஉரமாகின. விதைப்பு நாற்றாகி, பயிராகி அறுவடை முடிந்தது. நெல்லை மனிதன் எடுத்துக் கொண்டான், வைக்கோலை மாட்டுக்கு வழங்கினான். நெல்லை ஆலையில் தீட்டி அரிசியை எடுத்துக் கொண்டான். உமியையும் தவிட்டையும் மாட்டுக்குக் கொடுத்தான். அரிசி உலையில் பொங்கியபோது, சோற்றை அவன் உண்டான். கஞ்சி தண்ணியை மாடுகள் குடித்தன. மீண்டும் மாடுகள் சாணத்தை அவன் வயலுக்கு உரமாக்கின. ஏரில் பூட்டிய மாடுகளோடு மனிதனும் நடந்தான். விவசாயம் தொடர்ந்தது. விவசாயிகள் வாழ்வில் விளக்கு எரிந்தது.
இயற்கையில் கழிவு என்பதில்லை, சுழற்சி முறையில் எல்லாமே பயன்பாட்டுக்கு உரியவைதான். இந்தப் பயன்பாட்டுச் சுழற்சி நவீன ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் (மருந்து என்று சொல்லலாமா?) மாறிப் போயின.
ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் விற்பனை செய்வதற்காக அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பன்னாட்டுக் கம்பெனிகள் போட்ட ஆசைத் துாண்டில்தான் 'குறைந்த காலப் பயிர்'.
சம்பா பயிரைவிட குறைந்த காலத்தில் புதிய ' ஐ ஆர் 8' போன்ற பயிர்கள் விளைய இயற்கை உரம் உதவாமல் போயிற்று. ரசாயன உரத்தையும், நவீன பூச்சிக் கொல்லி மருந்தையும் பயன்படுத்தினால்தான், அவற்றின் அதீதத் துாண்டலில் அப்பயிர்கள் குறைந்த கால அளவில் விளையும்.
ஏமாந்த விவசாயிகள்
குறைந்த காலத்தில் அறுவடை என்பதில் அன்று நம் விவசாயிகள் ஏமாந்து போனதின் விளைவு, இன்று விளைநிலங்களும், விளைபொருட்களெல்லாம் விஷமாகிப் போயின!
காய்கறிகளும், பழவகைகளும் உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் உடல்நலன் சிறக்கும் என்று அடிக்கடி நிறைய ஆலோசனைகளைக் கேட்கிறோம். ஆனால் நுாற்று ஐம்பது நாட்களில் விளையும் கேரட் கிழங்குக்கு, ஐம்பத்து ஐந்து முறை நஞ்சு தெளிக்கிறார்களே! பத்து மாதத்தில் பலன்தரும் வாழை மரத்துக்கு, நான்கு முறை ஊசி மூலம் நஞ்சை ஏற்றுகிறார்களே! 100 நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு, பதினேழு முறை நஞ்சு தெளிக்கிறார்களே! விளைச்சல், மகசூல், சம்பாத்தியம் என்ற பெயரில் விஷத்தைப் பரிமாறுகிறார்களே என்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கவலை, அவரது மறைவுக்குப் பின்னரும் அப்படியே உள்ளதே?
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையில் தனது ஞானத் தந்தை என்று குறிப்பிட்ட ஜப்பானை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானவு புகோகா, “இயற்கை விவசாயம் என்பது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிரை விளைவிப்பது அல்ல, இயற்கையைக் காயப்படுத்தாமல், ஏன் மண்ணைக் கூட உழாமல் நிகழ்த்துவது,” என்கிறார்.
'இயற்கை வேளாண்மை' என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தால் போதும் என்று பொருள் தருகிறார் புகோகா.
இனி உண்பதற்காக நம் வாய் அருகில் வரும் ஒவ்வொன்றும் நம் உடல் நலத்திற்கு உத்திரவாதம் தருவதாய் அமைய வேண்டும். இது குறித்த அறிவும் விழிப்புணர்வும் இன்றைய முதன்மைத் தேவை என்பதை உணர்வோம்!-முனைவர்.மு.அப்துல் சமதுதமிழ் பேராசிரியர்.ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். 93642 66001

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement