Advertisement

அவர் கடிதம் படித்தாலே சுகம் ! 'உஷ்'.....இது லட்சுமி ரகசியம் !

'கும்கி' நாயகிக்கு இது குதூகல சீசன் போலும். ஜிகர்தண்டா ருசி குறைவதற்குள் 'கொம்பனில்' கார்த்தி உடன் லட்சுமி மேனனுக்கு டூயட் ரெடி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பில் நடந்த
படபிடிப்பிற்கு இடையே 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் என்றதும்...
துள்ளிக்குதித்து வந்தவரிடம் அள்ளித் தெளித்த கேள்விகள் இதோ....
* உங்கள் பள்ளியை நினைவிருக்கிறதா?
கொச்சி பாரதிய வித்யா பவன் பள்ளி, பிளஸ் ௨ வணிகவியல் படிக்கிறேன் சரியா? ஹ...ஹ...ஹ... இதுக்கு தானே சுத்தி வளைச்சீங்க!
* சினிமாவில் பிஸியா இருந்தாலும் படிப்பில் கெட்டி...
அதையும் நானே சொல்லிடுறேன்... படிப்பில் நான் புலி இல்லை. முழு நேரம்
பள்ளியில் இருந்தாலும் அவ்வளவா படிக்க மாட்டேன். சில நேரம் வகுப்பை 'கட்' அடிப்பதுண்டு. தேர்வுக்கு முதல் நாள் 'விழுந்து...விழுந்து' படிப்பேன்.
* கேரள பெண்ணிற்கு தமிழக மண்வாசனை எப்படி வந்தது?
அது ரொம்ப கஷ்டம். கிராம மக்களிடம் பேசி, பழகினால் தான் புரிதல் ஏற்படும். இயக்குனர் சொன்னால் 'மாடர்ன்' பெண்ணாக மாறவும் நான் ரெடி.
* சாப்பாடு விஷயத்தில் எப்படி...
சைவம் உணவுகள் மீது கொள்ளை பிரியம். அதே நேரத்தில் உடலுக்கு முக்கியத்துவம் தருவேன். பாண்டிய நாடு படத்தில் குண்டாக தெரிந்ததும் உடனே இளைத்துவிட்டேன். இப்போ 'ஓகே' தானே...?
* அழகாக தமிழ் பேசுகிறீர்களே...எப்படி சாத்தியமாச்சு?
என் அம்மா உஷா தான். சென்னை கலாஷேத்ராவில் 'டான்ஸ்' கற்றவங்க. அவங்க சொல்லி தான் வீட்டில் தமிழ் சினிமாக்களை நிறைய பார்த்தேன். தமிழ் தானா வந்திருச்சு. இந்தியும் அப்படி தான். தெலுங்கு புரியும்; ஆனால் பேச தெரியாது.
* நீங்கள் மறக்க முடியாத ஆண்...
என் ரசிகர் சுந்தரபாண்டியன். அவரை நான் பார்த்தது இல்லை. என் பள்ளி முகவரியை தெரிந்து கொண்டு எனது பிறந்த நாள், தீபாவளி, ஓணம் வாழ்த்துக்களை அனுப்புவார். அவரின் கவிதை வடிவ கடிதத்தை படிப்பதே தனி சுகம்.
* நடிகையான பின் கேரளாவில் சந்திக்கும் அனுபவம்?
ஆட்டோ, பஸ்சில் தான் பள்ளிக்கு செல்வேன். ரோட்டோர கடையில் சாப்பிடு வேன். அங்கு யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இங்கு ரசிகர்கள் கூடிவிடுகின்றனர்.
* 'தூய்மை இந்தியா'வில் நீங்களும் ஐக்கியமாமே?
பிரதமர் மோடியை எனக்கு பிடிக்கும். விடுமுறை நாளில் கூட பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறேன். அது நம் கடமை தானே!
பொண்ணு தெளிவா இருக்கு... எதிர்காலமும் அமோகமா இருக்கும்... என ரேகை பார்க்காமல் ஜோதிடம் சொல்லிவிட்டு விடைபெற்றோம். lakshmi.menon96.gmail.comல் நீங்களும் வாழ்த்தலாம்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement