Advertisement

என் மன வானில் நீலப்பறவை : இன்று உலக தபால் தினம்

கல்லூரி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன்; கண்கள் என்னவோ வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. கடைசி பெஞ்ச்சில் ஒரு வசதி, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய பல விஷயங்களை சாதாரணமாக செய்யலாம். மதிய உணவு இடைவேளையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ''கிளாஸ் முடிஞ்சதும் ஹாஸ்டல நோக்கி வேகமா ஓடணும். எப்படியும் இன்னைக்கு வந்திருக்கும்... நேத்துத்தான் ஏமாந்துட்டோம்...'' வகுப்பு முடிந்ததும் விடுதியை நோக்கி வேகமாக ஓடிவந்து அறை சாவியை எடுத்து, பூட்டைத் திறந்து உள்ளே ஓடி, கையிலிருந்த நோட்டுகளை மேஜைமேல வச்சிட்டு (பொய்.. வீசிட்டு) கட்டில்ல படுத்து பரபரப்போடு கடிதத்தை படித்து... திரும்பத் திரும்ப படித்து முடித்த போது எடைக்கு எடை வியர்த்திருந்தேன்.


புரியலையா...?: பள்ளிப் படிப்பு வரை பக்கத்து ஊர்களில் படித்து விட்டு, கல்லூரிக்காக வீடு கடத்தப்பட்டு, விடுதியில் சேர்ந்து, அம்மாவையும் அப்பாவையும், பாசத்தோடு கத்தும் பசுமாடு போன்ற வாயில்லா ஜீவன்களையும் பிரிந்து கண்ணீரில் முகம் கழுவிய என் போன்றவர்களுக்குத் தான் புரியும் வீட்டிலிருந்து வரும் கடிதங்களின் அருமை. வெளியூருக்கு பேச வேண்டுமென்றாலே, தபால் அலுவலகத்திற்கு போய் டிரங்கால் புக்கிங் செய்துவிட்டு (அதுவும் நாம் பேச நினைக்கிற நபர் வசிக்கும் ஊரில் போன் இருந்தால்...) காத்திருக்க வேண்டிய எண்பதுகளின் தொடக்கத்தில் குடும்பத்தை பிரிந்து தொலை தூரங்களில் வசித்தவர்களுக்குத் தான் புரியும் கடிதங்கள் என்பவை அப்பாவின் தோள், அம்மாவின் மடி, மனைவியின் அரவணைப்பு, காதலியின் முத்தம், நண்பனின் வார்த்தைகள் என்ற உண்மை.

கடுதாசிக்காரர்கள் மீதான பாசம் : தந்தி, டிரங் கால், எஸ்.டி.டி., மொபைல், குறுஞ்செய்தி, இணைய தளம், இ-மெயில், பேஸ் புக், ஸ்கைப், வாட்ஸ் அப். இப்படி அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் அத்தனை தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் தாயாக இருந்த கடிதத்தின் பெருமை தனித்துவமானது. அந்த கடிதங்களை பரிமாறும் தபால்காரர்களுக்கு இருக்கும் வரவேற்பே அதற்கு அத்தாட்சி. பேங்க்காரரை பணமாகவும், ஏட்டையாவை பயமாகவும், முன்சீப்பை பவ்யமாகவும், வாத்தியாரை பணிவாகவும் பார்க்கும் எந்த கிராமமும் கடுதாசிக்காரரை பாசமாக பார்க்கும். எனக்கு தெரிந்து ரேஷன் கார்டில் சேர்க்கப்படாமல் எல்லா குடும்பங்களிலும் உறுப்பினராக இருக்கும் ஒரே ஜீவன் தபால்காரர் தான். தபால்காரர்களை தெய்வமாகவே பார்த்த எத்தனைக் காதலர்களை நாம் சந்தித்திருக்கிறோம்...!
பெரும்பாலான கிராமங்களில் படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வட்டமேசை மாநாடு பகலில் நடக்கும் இடமாகவும் தவறாமல் இருந்தது தபால் ஆபீஸ் தெரு தான். விண்ணப்ப படிவத்தில் தொடங்கி வேலை உத்தரவிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் சிலர் பையில் பேனாவும், கையில் எம்ளாய்மென்ட் நியூசும் வைத்திருக்க, காதலியிடமிருந்து வரும் கடிதங்களுக்காக காத்திருப்பவர்கள், பையில் சீப்பும் கையில் கர்ச்சிப்புமாக அமர்ந்திருப்பதை பார்க்கலாம்.

கடிதங்களுக்கே அதிக முத்தம் : பணத்தை சேமித்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிற வசதிகளை செய்திருப்பவை வங்கிகள் என்றால் உணர்வுகளையும், நினைவுகளையும் எழுத்துக்களாக சேமித்து வைத்து தேவைப்படும் போது, மறுபடியும் மீட்டுக் கொள்கிற வசதிகளை செய்பவை... செய்தவை கடிதங்கள் தான்.உலகத்தில் குழந்தைகளையும், காதலர் களையும் விட அதிக முத்தம் வாங்கிய பெருமை கடிதங்களுக்கு மட்டுமே உண்டு.
இன்றும் கிராமங்களில் துருப்பிடித்த கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் காலாவதியான தபால் பெட்டிகள் தான், காலாவதியாகாத உறவுகளின் உணர்வுகள்.
தனிமனித எழுத்து திறனுக்கு ஒரு பயிற்சி பாசறையாக இருப்பதுவும், வெளிச்சத்திற்கு வராத கட்டுரையாளர்களையும், கவிஞர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கி தனக்குள்ளேயே ஒளித்து வைத்திருக்கும் ஒப்பற்ற ஊடகமாக இருப்பதுவும் கடிதங்களே!
கடிதங்களை பற்றி 'நேயர் விருப்பத்தில்' எழுதிய அப்துல்ரகுமானும், 'கண்ணீர்
பூக்களில்' எழுதிய மேத்தாவும், 'இதுவரையில் நானில்' எழுதிய வைரமுத்துவும் தான் காதல், கவிதை, கடிதம் என்ற மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பவை என்று என் போன்றவர்களுக்கு புரிய வைத்தார்கள்.

அடி பெண்ணே!
காதலை
மதத்தின் பெயரால்
மறுத்த
இந்த உன் கடிதத்தை
என்ன செய்வது...
உன் மதப்படி புதைப்பதா?
என் மதப்படி எரிப்பதா?
என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நான் படித்த காலத்தில் வாசித்த என் கவிதைக்கு கிடைத்த
கைத்தட்டல் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு எனக்கு வந்த ஒரு கடிதம் எங்களுக்கு மட்டுமே தெரியும்.
நிலாச் சோறு, டூரிங் டாக்கிஸ், வில்லு வண்டி, அறுப்புக் கடை, ஊர் பஞ்சாயத்து, பம்பர விளையாட்டு... இன்னும் சிலவற்றை வாழ்க்கையாகவே பார்த்த எங்கள் தலைமுறை இதை வார்த்தையாகக் கூட பார்க்க முடியாமல் போன இன்றைய கணினித் தலைமுறையை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடியும்.
மேற்சொன்ன வரிசையில் கடிதம் என்பதுவும் இணைந்துவிட்டதே
என்பது தான்
வலி தீரா வருத்தம்.

- கவிஞர் நெல்லை ஜெயந்தா


இரங்கல் கடிதம்

கல்லூரி விடுதிக்கு
அம்மா எழுதும்
கடிதத்தில் தெரியும்
தாய்ப்பால் வாசம்

பணவிடைத் தாள்களின்
அடியில் மட்டுமே
வரவேற்கப்படும்
அப்பாவின் கடிதங்கள்!

காதலிக்கும் போது தான்
தெரியவந்தது
கடிதங்களைப் படித்தும்
பசி ஆறலாம்!

சுமக்கும் செய்திகளிலிருந்து
கடிதங்களே
அறிவித்துவிடும்
நண்பர்களின் வயதை

பிரசவத்திற்குப்
பிறந்தகம் போன
மனைவிகளின்
கடிதங்களால்
காப்பாற்றப்படலாம்
பல கணவர்களின் கற்பு

இப்பொழுதெல்லாம்
என்
கண்களில் படுகின்றன
தொலைபேசிகள்
கடிதங்களின் சவப்பெட்டியாக.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement