Advertisement

அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும் நிலை நமக்கு தேவையா?

மனிதனுக்கு உணவு மிகவும்

முக்கியம். அரிசி, சோளம்,


மக்காச்சோளத்திலிருந்து தேவையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. சத்துள்ள உணவு பொருட்களை விளைவிக்கும் மண் வளம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. நிலக்கடலை, வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், அவரை, கத்திரிக்காய் மற்றும் பழ வகைகள் தமிழகத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.


வீணாகும் திறன்


மண்வளம், நீர் வளம், தட்பவெப்பம், மலை சார்ந்த காற்றினால் எல்லா வற்றையும் விளைவிக்கும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, விளைவிக்கும் திறன் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.


இருப்பினும் விவசாயிகளின் உற்பத்தி திறனை உருவாக்க முடியாமல் நீண்டகாலமாக தவித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளிடம் வியாபார நோக்கமும், சந்தைபடுத்துவதற்கான அணுகுமுறையும் இல்லாதது மிகப்பெரும் குறையாக உள்ளது. உணவு பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு குளிரூட்டும் சாதனங்கள், சேமிக்கும் கிட்டங்கிகள் இல்லை. இதனால் வீணாகும் உணவு பொருட்கள் 45 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.


உபரி வருமானம்


அறுவடைக்கு பின் வீணாகும் காய்கறி, பழங்களின் அளவு 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்தாலே தமிழகம் உன்னதமான நிலைமைக்கு வந்து விடும். மத்திய மாநில அரசுகள் மானியம் அளித்தாலும் வியாபாரிகள், விவசாயிகளிடம் அவை சென்று சேர்வதில்லை. இந்திய அளவில் அறுவடைக்கு பின் வீணாக்கப்படும் தானியங்கள், பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்தால் உபரியாக 80 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உலக அளவில் கிராக்கி


வேர்க்கடலையை தோல் உரித்து உப்பும், மிளகும் சேர்த்து சிறிய பாக்கெட்டுகளில் விற்றால், உலக அளவில் 5 நட்சத்திர ஓட்டல்களும், விமான நிறுவனங்களும், அங்காடிகளும் வாங்கிக் கொள்ள தயாராக உள்ளன. தக்காளியை பதப்படுத்தி சூப், பவுடர், பேஸ்ட் தயாரித்து பேக் செய்து அனைத்து உலக அங்காடிகளிலும் விற்பனை செய்தால் அமோகமான லாபம் கிடைக்கும்.


முருங்கைக்காயை பவுடர் செய்து 100 கிராம் பாக்கெட்டுகளில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தால் அதற்கான விலை ரூ 24 என மதிப்பிடப்பட்டுள்ளது. மாங்காயின் தோலை உரித்து மேங்கோ சூப், ஊறுகாய், சட்னி என கேனில் அடைத்து ஏற்றுமதி செய்தால் நிகரற்ற லாபத்தினை பெறலாம். சப்போட்டா பொடியை பாலில் கலக்கி குடிப்பதற்காக மேலை நாட்டு நுகர்வோர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.


விழிப்புணர்வு தேவை


அனைத்து பழங்களும் நமது கிராமங்களை சுற்றியுள்ள மலைகளிலும், விவசாயிகளின் நிலங்களிலும் சர்வசாதாரணமாக வளரக்கூடியவை. இவற்றை வணிகமயமாக்குவதற்கு விவசாயிகளுக்கு நல்ல விழிப்புணர்வு வேண்டும். உழவர் சந்தைகள் அனைத்து பகுதிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக குளிர்சாதன வசதிகள் செய்து கொடுத்தால் நீண்டகாலத்திற்கு பொருட்கள் அழியாமல் இருக்கும். விவசாயத்தின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளும் உருவாகும். கிராமத்து இளைஞர்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்கு செல்வது குறையும்.


சுபிட்சம் வேண்டும்


எந்த பொருளாதாரமும் இயந்திரமயமாக்குதலின் மூலம் உன்னத நிலையை அடைந்தது இல்லை. விவசாயம் உன்னத நிலையை அடைந்தால் அனைவருக்கும் உரிய உணவு, அதுவும் சத்துள்ள உணவு எல்லோருக்கும் கிடைக்கும். அதுவே சுபிட்சத்தின் முதல் அறிகுறி. நமது நாடு 2.1 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்தபின்புதான் முழுமூச்சான இயந்திரமயம் வெற்றி கண்டது. பட்டினியோடு எவராலும் ஒரு வல்லரசை உருவாக்க முடியாது. இது சீனா, பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.


பற்றாக்குறை நீடிக்கும்


இருக்கும் நிலப்பரப்பில் 3 சதவீதத்தை பயன்படுத்தி அமெரிக்காவில் அனைவரின் பசியை நிவர்த்தி செய்துள்ளனர். பரந்து விரிந்த நல்ல விளைநிலங்களை கொண்ட நாம், உற்பத்தியில் ஓரளவிற்கு தன்னிறைவை பெற்றிருந்தாலும் எதிர்காலத்தில் எல்லோருக்கும் தேவையான உணவினை பற்றாக்குறை இல்லாமல் அளிக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.


தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் உற்பத்தி திறன் 20 லிருந்து 30 சதவீதம் உயர்ந்தால் நமது நாட்டில் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். இதிலிருந்து கொஞ்சம் நழுவினாலும் நாம் கோதுமை, அரிசி, மக்காச்சோளத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும். சில பெரிய நிறுவனங்கள் இதை எதிர்பார்த்து மடகாஷ்கர், கேனியா, தாங்கோ, ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான எக்டேர்களை விலைக்கு வாங்கி அங்குள்ள மக்களை பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியை துவக்கியுள்ளனர்.


தேவை வழிமுறைகள்


மோடி அரசில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதே வேகத்துடனும், விவேகத்துடனும் மூன்று முக்கிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.


1. அறுவடைக்கு பின் பாதுகாப்பு வழிமுறைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


2. அறிவுசார்ந்த நல்ல கல்வி மற்றும் பயிற்சி கொடுத்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும்.


3. மிகப்பெரிய அளவில் உற்பத்தி திறன் படைத்த விவசாயிகளை கவுரவித்து மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.


மலையும், மலை சார்ந்த இடங்களும் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. அதிசயப்பட வைக்கும் பழவகைகள் கொடைக்கானல், ஊட்டி, பெருமாள்மலை, தாண்டிக்குடி, பன்றிமலை மற்றும் இதர இடங்களில் பயிரிடப்படுகின்றன. அவற்றை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்தில் நாம் தன்னிறைவினை பெறலாம்.


- -முனைவர் ஆர்.சந்திரன்,


வளாக இயக்குனர்,


எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.


போன்: 83441 63560

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement