Advertisement

பொருளாதாரத்தில் புது சாதனை படைக்குமா அரசு?

மனித வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குவது, பொருளாதாரமே. மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது, அரசின் தலையாய கடமையாகும்.

இந்தியப் பொருளாதாரத்துக்கென, ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் நுாலான, அர்த்த சாஸ்திரம் இங்கு தான், 2300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அதில், நாட்டுக்குப் பொருளாதார வலிமையின் அவசியம் மற்றும் பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் ஆகியவை பற்றியெல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.காலனி ஆதிக்கக் காலத்தில் தான், இந்தியா உள்ளிட்ட தொன்மையான பொருளாதாரங்கள், பெரும் சிதைவுகளுக்கு உள்ளாயின. சுதந்திரம் வாங்கும் முன்னரே, மிகவும் ஏழை நாடாக இந்தியா ஆகியிருந்தது.சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, மக்கள் கடுமையாக உழைக்கத் துவங்கினர். பலவிதமான சிரமங்களுக்கிடையிலும், முடிந்த வரை அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொண்டனர். வெவ்வேறு புதிய தொழில்களில் நுழைந்தனர்.

கலாசாரத்தில் நம் நாட்டுக்கென, பல தனித்தன்மைகள் உள்ளன. அவையே பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக அமைக்கின்றன. நம் குடும்ப அமைப்பு, எளிய வாழ்க்கை முறை, சேமிக்கும் குணம், உறவுகள் சார்ந்த வாழ்க்கை தொழில் முனையும் தன்மை என, பாரம்பரியமான குணங்கள் பலவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளன.சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற உந்துதலால், மக்கள் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். எனவே உலகின் பணக்கார நாடுகளை விட, சொந்த தொழில் செய்பவர்கள், நம் நாட்டில் மிக அதிகமாக உள்ளனர்.இந்தியாவில், எட்டரை கோடி பேர் தொழில் முனைவோராக உள்ளதாக, லண்டன் மேலாண்மை நிறுவனம் சொல்கிறது. அவை பெரும்பாலும், சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் உதவிகள் அதிகமின்றி நடத்தப்படுபவை.அதனால் தான் அரசுகளின் அணுகுமுறைகளிலும், செயல்பாடுகளிலும் பல குறைபாடுகள் இருந்த போதும், சமூகங்களால் இந்தியப் பொருளாதாரம்
முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

கடந்த, 2007ல், மேற்கு நாடுகளில் தோன்றிய நிதி நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்தது. அதனால் உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட பல பகுதிகளும், வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அவற்றில் பல நாடுகள், இன்று வரைக்கும் சிரமங்களிலிருந்து முழுமையாக மீண்டு வரமுடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. உலகின் பல நாடுகளையும் சிரமப்படுத்திய அந்த நெருக்கடிகளிலிருந்து, அதிக பாதிப்புகள் இல்லாமல் செயல்பட்ட நாடுகளில் முக்கியமானதாக, இந்தியா உள்ளது. அதனால் சர்வதேச அளவில், இந்தியப் பொருளாதாரம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. வாஜ்பாய் அரசு, தங்க நாற்கரச் சாலை போன்ற திட்டங்கள் மூலம், கட்டுமானத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தின; வேலை வாய்ப்புகள் அதிகரித்தன; பொருளாதார செயல்பாடுகள் தீவிரமடைந்தன. அரசுக் கணக்கில் வழக்கமாக வருடா வருடம் தொடர்ந்து வரும், நடப்புக்கணக்கு பற்றாக்குறைக்குப் பதிலாக, 1970௦களுக்குப் பின் முதன் முறையாக, 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் உபரித் தொகை ஏற்பட்டது.

தங்களின் பொருளாதார வழிமுறைகள் தான், மிகவும் உயர்வானது என, மார்த்தட்டி வந்த பணக்கார நாடுகள் எல்லாம், இந்தியாவின் செயல்பாடுகளைப் பற்றி, ஆச்சரியமாகப் பேச ஆரம்பித்தன. எனவே சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒதுக்கிவிட்டு, எந்த நாடும் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேச முடியாத சூழ்நிலை உருவானது. ஆனால் மிகவும் துரதிர்ஷடவசமாக, கடந்த சில ஆண்டுகளாக நிலைமை பெருமளவு மாறி விட்டது. அரசு மட்டங்களில் கொள்கைகளை வகுப்பதில், பெரும் தவறுகள் நடைபெற்றன. வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகள், வருடா வருடம் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்வது, வாடிக்கையாகி விட்டது. மேலும், விவசாயத் துறையை விட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். உலக மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு, மக்களைக் கொண்டுள்ள நம் தேசத்தில், விவசாயம் நசிந்து போனால், நாடு எப்படி சுய சார்புடன் செயல்பட முடியும்.

இந்தியாவின் சில்லரை வணிகம் என்பது, சாதாரண மக்களால், நாட்டின் மூலை முடுக்களிலெல்லாம் நடத்தப்பட்டு, மொத்த பொருளாதார உற்பத்தியில், 14 சதவீத அளவு பங்களிக்கக்கூடிய மிக முக்கியமான துறை. அதில், ௪ கோடி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப் பட்டுள்ளது. அப்படியிருந்தும், எந்தவித அடிப்படை நியாயமும் இல்லாமல், பன்னாட்டு நிறுவனங்கள், இங்கு வந்து பலன் பெறுவதற்காக அது திறந்து விடப்பட்டிருக்கிறது.ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மின்சாரம், சாலை வசதிகள், சமூக மேம்பாடு உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்புகள், மிகவும் அவசியம். அதற்காக அவற்றில் மூலதனங்களும், தொடர்ந்த கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கொள்கை முடிவுகளை எடுப்பதில், பெரிய சுணக்கம் நிலவுகிறது. அதனால் லட்சக்கணக்கான கோடி ரூபாய், மதிப்புள்ள திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே, அரசின் கொள்கைகளை வகுப்பதிலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் தவறுகளும், ஊழல்களும் நிறைந்திருப்பது வெளியாகி வருகிறது. அதனால் அரசுக்கு நியாயமாக வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய் வருமானங்கள், ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சில நபர்களுக்கு சென்று கொண்டிருந்தது.

உதாரணமாக, நம் நாட்டில் அதிக அளவில் நிலக்கரி உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்க வேண்டியது அரசின் கடமை. அப்போது தான் பொருளாதாரம் வளரமுடியும். ஆனால் தன் தவறுகளால், அரசு, அவற்றை முறையாகப் பயன்படுத்தித் திட்டமிட முடியாத சூழ்நிலையில் உள்ளது. நாட்டின் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சம்பந்தப்பட்ட அரசின் அத்தியாவசியமான கடமை. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடியே ௨௦ லட்சம் பேர், புதியதாக உழைக்கும் வர்க்கத்தில் இணைந்து வருகின்றனர். ஆனால், கடந்த 2004 - ௦05ம் ஆண்டு துவங்கி வேலை வாய்ப்புகள்
உருவாக்கம் மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த 1999 - 2004ம் கால கட்டத்தில் வாஜ்பாய் அரசு, ஆறு கோடி பேருக்கு மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது. அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு, 2004 - 2009 வரை வெறும், 27 லட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக, மத்திய அரசின் மாதிரி கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இரண்டாவது முறை மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை.அரசின் நிதி நிர்வாகமும், மிகவும் மோசமாகியது. 2004 முதல் 2013 வரையான கால கட்டத்தில், இந்தியாவின் வெளி நாட்டுக் கடன், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று விட்டது. அதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும், சென்ற நிதியாண்டு முதல் மிகவும் குறைந்து வருகிறது. கடந்த 10௦ ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற 2012-13ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்து உள்ளது.

இந்தியா, உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைப் பெற்று விளங்குகிறது. வேலை செய்வதற்குப் போதுமான மக்கள், நம்மிடம் இருக்கின்றனர். ஆனால், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல புது அரசு திட்டமிட வேண்டும்.மேற்கத்திய சித்தாந்தங்கள் தோற்றுப் போய், நம் நாட்டுக்கென வாய்ப்புகள் அதிகமாகவுள்ள இந்த சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறி வருகிறோம். இதுகுறித்து, புதிய அரசு தேவையான நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும். போதுமான அளவு இயற்கை மற்றும் மனித வளங்களை நாம் பெற்றுள்ளோம். நமக்குத் தேவையெல்லாம் தேசப்பற்றுமிக்க ஒரு உறுதியான தலைமையே. ஒரு நாட்டின் பொருளாதாரம் வெற்றி பெறுவதற்கு, அவசியமே தொலை நோக்கு கொண்ட திறமையான நிர்வாகம் தான். புது அரசு, அதனை நிரூபிக்கும் என நம்பலாம்.
'இ-மெயில்': pkspathigmail.com

- ப.கனகசபாபதி -
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்
Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement