Advertisement

எந்த வெற்றியும் எளிதாக கிடைத்தது இல்லை : அட்லி மெர்சல்

ராஜா ராணி, தெறி, மெர்சல் என, இயக்குனர் அட்லியின், கிராப் கோடம்பாக்கத்தில் உயர உயர பறக்கிறது. தீபாவளிக்கு வெளி வர உள்ள மெர்சல் படம் பற்றி, அவர், நமக்கு அளித்த பேட்டி:

மெர்சல் படம் பற்றி?
படம் முழுக்க ஒரு மிரட்சி இருக்கும். நம்ம வாழ்க்கை முறை, சமூக விஷயங்கள், நம்ம கடமை எல்லாமுமே இருக்கும். இரண்டே முக்கால் மணி நேரம், ரசிகர்களுக்கு பெரிய தீபாவளி, ட்ரீட் ஆக இந்த படம் இருக்கும்.

இரண்டாவது முறையாக விஜயை இயக்குவது பற்றி...?
விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரை பார்க்காத விஜயை, இந்த படத்தில் பார்க்கலாம். மக்களும், ரசிகர்களும், விஜயிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கின்றரோ, அந்த விஷயமெல்லாம் இந்த படத்தில் இருக்கும்.

மெர்சல் படம் எதைப் பற்றி?
சிலர், இதை ஜல்லிக்கட்டு படம் என்கின்றனர்; அப்படியெல்லாம் எதுவுமில்லை. தினமும், நாம் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்துத்தான் இந்த படத்தை தயாரித்துள்ளோம். தமிழனோட அடையாளமாக இந்த படம் இருக்கும்.

படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறாரா?
தந்தை, மகன் ரோலில் நடிக்கிறார் என்பதை உறுதியாக சொல்ல முடியும். மற்றபடி, மூன்றாவது ரோல் என்பது சஸ்பென்ஸ்.

படத்தில் மூன்று ஹீரோயின்கள் ஏன்?
அப்பா விஜய் பேர், படத்தில் தளபதி; ஊர் பெரியவராக நடிக்கும் அவருக்கு ஜோடி நித்யா மேனன்; அப்புறம் காஜல், சமந்தா படத்தில் இருக்காங்க. சமந்தாவும், நயன்தாராவும் எனக்கு பிடித்த ஹீரோயின்கள். சமந்தா, இந்த படத்தில் புதிதாக ஒரு ரோலில் நடித்துள்ளார். வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் காஜல் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி?
கணிதன் இசை வெளியீட்டு விழாவில் தான் ரஹ்மானை சந்தித்தேன். என்னைபற்றி பேசியது ஆச்சர்யமாக இருந்தது. மெர்சல் பற்றி சொன்னேன், அவரும் கதையை கேட்டு விட்டு பண்ணலாம் என்றார். பிப்ரவரியில் ஷூட்டிங் போகனும் என்றார். ஏப்ரல் - மே மாதம் பாடல்கள் தரேன் என்றார். என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் ரஹ்மானிடம் இணைந்து பணியாற்றியது.

இந்த படத்துக்கு சம்பளம் அதிகம் வாங்கியதாக கூறப்படுவது பற்றி...?
நான் யாரிடமும் சம்பளம் பற்றி பேசுவதில்லை; கேட்பதில்லை. எனக்கு என்ன தகுதி இருக்கு என நினைத்து, தயாரிப்பாளர்கள் என்ன கொடுக்கின்றனரோ, அதை வாங்கிக் கொள்வேன்.

இந்த படத்தில், விஜய் மேஜிக் பண்றாரா?
படம் முழுக்க மேஜிக் பண்றார். இதற்காக முறைப்படி மேஜிக் கற்றுக்கொண்டார். பல காட்சிகளை,டூப் இல்லாமல் எடுத்திருக்கிறோம்.

உங்கள் வளர்ச்சி பற்றி...?
எதுவுமே, எனக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. எட்டு ஆண்டுகள், உதவி இயக்குனராக இருந்தேன். அதற்கு முன், சினிமா பற்றி படித்தேன்; அப்புறம், குறும்படங்கள் எடுத்து, தேசிய விருது பெற்றேன். விஜய் கால்ஷீட்டுக்காக, ஒன்றரை ஆண்டு காத்திருந்தேன். என் வளர்ச்சி எல்லாமே, ஒரே நாளில் சாத்தியமாகவில்லை; படிப்படியாக கிடைத்தது தான்.

ஆளப் போறான் தமிழன் என, படத்தில் பாட்டு வைத்தது, அரசியலை குறிவைத்தா?
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என, பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால், அவர் தான், இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும். இந்த படத்தில், ஆளுமையான ஒரு பாடல் தேவைப்பட்டது. அதனால் தான், இந்த பாட்டு இடம் பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம்?
படத்தில் சின்ன மல்யுத்தம் காட்டி இருக்கோம். ராஜஸ்தானில் 3 ஆயிரம் பேரை வைத்து கொளுத்தும் வெயிலில் நடத்தினோம். இப்படி யாரும் பண்ண மாட்டாங்க என்று நினைக்கிறேன்.

தலைப்பு பிரச்னை, ஜிஎஸ்டி என மெர்சல் நிறைய பிரச்னைகளை சந்திப்பது பற்றி?
இந்த படம் தொடங்கியதில் இருந்தே பல பிரச்னைகள் இருந்தது. சில நேரம் பயமும் கொடுத்திருக்கு, ஆனால் அதுவே சரியாகவிடும். இப்போது நான் என் வேலையை பார்த்துகொண்டு இருக்கிறேன். எல்லாம் பிரச்னையும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் என்ன ஸ்பெஷல்?
விஜய் ரசிகர்களுக்கும், எனக்கும் தளபதி கேரக்டர் ரொம்ப பிடிக்கும். திரையில் படம் பார்க்கும்போது அவ்வளவு ரசிப்பார்கள். ஆளப்போறான் தமிழன் பாட்டு செம்மையா இருக்கும். அதன்பிறகு ஒரு மேஜிக் ஷோ பிரம்பிப்பாக இருக்கும். குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டலாக இருக்கும்.

நீங்க தயாரிக்கும் படங்கள் பற்றி?
சங்கிலி புங்கிலி கதவ தொற படத்துக்கு பிறகு நிவின் பாலி, சாய் பல்லவியை வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். என் உதவியாளர் சூர்யா இயக்குகிறார். அடுத்து அசோக் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் ஒரு படம் பண்ணேன். என்னால் பாகுபலி மாதிரி பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் எடுக்க முடியாது. திறமையான என உதவியாளர்களை கண்டுபிடித்து சிறிய அளவில் படம் தயாரிக்கிறேன்.

அடுத்து உங்க, டார்கெட் ஹீரோ யாரு?
விஜயுடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்; அதற்கு பின், ரஜினியை இயக்க வேண்டும். அதற்கு பின், பாலிவுட்டிலும் சில படங்களை இயக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement