Advertisement

வரும் வாரம் ஜுலை 21ம் தேதியும் 7 படங்கள் ரிலீஸ்

ஜுலை மாதம் ஆரம்பமான பின் வந்த முதல் வெள்ளிக்கிழமையான 7ம் தேதி தியேட்டர்கள் ஸ்டிரைக் நடந்த காரணத்தினால் அன்றைய தினம் ஒரு படம் கூட வெளிவரவில்லை. அதனால், பல படங்களை ஜுலை 14ம் தேதிக்கும், மற்ற நாட்களுக்கும் தள்ளி ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜுலை 14ம் தேதி “நிரஞ்சனா, நீ என்ன மாயம் செய்தாய், திரி, ரூபாய், பண்டிகை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ''பண்டிகை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” ஆகிய இரண்டு படங்களைத் தவிர மற்ற படங்கள் தடுமாறிக் கொண்டுள்ளதாகத்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார வெள்ளிக்கிழமையான ஜுலை 21ம் தேதியும் 7 படங்கள் வெளிவர உள்ளன. “விக்ரம் வேதா, மீசைய முறுக்கு, பாக்கணும் போல இருக்கு, சவரிக்காடு, ஏன் இந்த மயக்கம், 88, எந்த நேரத்திலும்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

ஜுலை மாத முதல் வாரத்தில் நடந்த தியேட்டர்கள் ஸ்டிரைக்கால் ஜுன் மாதக் கடைசியில் வெளிவந்த படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது. அதன் பின் ஸ்டிரைக் முடிந்து தியேட்டர்கள் திறந்த பின்னும் பழையபடி வசூல் இல்லாமல் தியேட்டர்களும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமும் தியேட்டர்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு காட்சிகளுக்கு மக்கள் வருவது வெகுவாகக் குறைந்துவிட்டதாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வாரமும் 7 படங்கள் வெளியாவது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும் இரண்டு படங்களைத் தவிர மற்ற படங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement